வழமை

சின்னத் துளி…
முகிலின் சிறையுடைத்து வீழ்ந்தாலெம்
மண்சிலிர்க்கும்;
அதனின் மனம் குளிர்ந்து
உறங்குநிலை
கொண்டு நிலத்துள் கொடுகிக் கிடந்த விதை
எல்லாம்…அனேகமாக
எழுந்து முளைக்கவைக்கும்!
மெல்லவோர் சாரல் வீசினாலே
எங்கள்நிலம்
பச்சை நிறத்தினிலே பாவாடை கட்டித்தன்
உச்சந் தலையினிலே
உயிர்ப்பூக்கள் சூட்டி எழும்!
பூக்கள் நிறைய,
புதுவாசம் நிதம் பரவ,
ஈக்கள் வண்டுகள் எல்லாமும்
படையெடுத்து
பூக்களெனும் மங்கையரைப்
பொருந்துதற்கு வட்டமிடும்….
இது வழமை!
இதற்கு இடையில் வரும் மாரி கோடை
சதிசெய்து,
பூக்களது சட்டை உரித்து, புது
விதியுரைத்து, பூந்தளிர்கள்
வீழ்ந்து படவைக்கும்!
உதிர்ந்து மொட்டும் பூவும்
காய் கனியும் ஒளிந்தாலும்
விதைகள் சிலவிதைகள் மீண்டும்
உறங்குநிலை
தனை அடையும்;
செத்ததென உயிர்ப்பிழந்த தரையினிலே
துணையின்றிப் புதைந்திருக்கும்!
தூறல் மறுபடியும்
விழ உயிர்க்கும் உறங்குநிலை விதைகள்!
இதும் இங்கே
வழமை…இதையறியா மடையர்கள்
மாரி கோடை
அழித்தது வாழ்வை, எம் அழகை,
என வீழ்ந்தழுவார்!
முளைக்கும் ஓர்நாள் நம்
மண்ணுக்குப் பொருத்தமான
உறங்குநிலை விதைகள்…
என்பதை யார் உணர்ந்தறிவார்?
வரலாறைப் புரியாதோர்
வாய்புலம்பிக் கிடக்கின்றார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply