புதியதானதோர் எண்ணம் பிறந்திட
புத்துயிர்த்து நும் சிந்தனை தன்னிலோர்
விதி எழுதிட வேணும் என் தோழனே!
விதை இடு சிந்தை தன்னை நீ சாறியே!
நதியைப் போல நகரும் எம் வாழ்விலே
நாகரீக நடப்பினுக் கேற்றதாய்,
உதையும் யதார்த்தம் தன்னைத் தடுப்பதாய்,
உலகளந்ததாய்ப் பேசணும் சொற்களே!
எங்கள் தொல்புகழ் ஈடிணையற்றது.
எம் தமிழ்த்திறம் உலகம் அறிந்தது.
எம் இலக்கியம், எங்களூர்த் தத்துவம்,
எம் மரபுகள், எங்கள் விழுமியம்,
எங்கள் செம் புகழ், உச்சங்கள் தொட்டது.
இவற்றை முற்றாய்க் கடாசி எறியாது
பொங்கும் அவற்றின் புகழில்…இன்றைக்கேற்ப
புதுமை சேரப்பதெம் பொருளுக் குகந்தது!
ஐந்து ஆயிரம் ஆண்டாய் வருமிடர்
அனைத்தும் தாண்டி அப்பப்பவே தோன்றிடும்
அந்தரங்கள் அறுத்துப் பின்னடைவுகள்
அளித்த வெற்றிடம் யாவும் நிறைத்து…தன்
மந்திரச் சுயத்தால் இன்றைக்குமே
வளர்ந்து காலத்திற்கு ஏற்ப புடம் பெற்று
சுந்தரம் மாறா மொழியும் கலைகளும்
சுடர…நீயுந்தான் சொல் வழி; உதவு…எழு!