சூர சங்காரம்

தங்கு தடையின்றித் தருமத்தைச்
சாய்த்தவரைச்
சங்காரம் செய்வதற்கு
சண்முகன் அவதரித்தான்!
ஆணவம் கன்மமொடு மாயை
அவுணர்களில்
சோதரராய்த் தோன்றித் துணிந்து;
அதர்மத்தை
ஏவி எளியவரை ஏய்த்து;
பல்லாண்டு
செய்த கடுந்தவத்தின் சீரால்
அடைந்தபலம்,
எய்கருவி சாகா வரம்,
இவற்றால் மமதை கொண்டு;
“கேட்பதற்கார் உள்ளார்?
கீழ்ப்பட்டோர் தங்களுக்கே
ஆட்பட்டோர்” என்று அடங்கா அகந்தையுடன்
வரம்கொடுத்தோர் கைபிசைய…
அவரை மதியாது
“இறைவர் யாம் வணங்கும் எமை”என்று
தேவர்களைச்
செக்கிழுக்க வைத்தும்,
சிறையிலிட்டு வதைத்தும்,
பக்குவரை ஞானியரைப் பகைத்தும்,
செழித்திருந்த
உண்மைகளைக் கொன்றும்,
ஒலித்த குரல் தடுத்தும்,
தண்டனைகள் சாதா ரணர்க்களித்தும்,
கொடுமைசெய்யத்
தொடர்ந்தது சூரர்களின் காலம்!
அதையழிக்கக்
கிடைத்தனன் வேலவனும்
‘கிரெளஞ்சம்’ தகர்த்தவேலும்!
சூர சங்காரம் சொன்ன அறச்சேதி
நீளுமடா என்றும்
நியாயம் அது வழங்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply