இவையும் அவைபோலோ?

காலமும் ஏதும் பலனை எதிர்பார்த்தா
யாரையும் தூக்கிப்
புகழ்க்கொப்பில் ஏற்றிவிடும்?
காலம் தனது சொந்த நலனுக்கு
ஏற்றாற்போற் தானா
எவரினையும் மேடையேற்றும்?
காலமோர் வல்லரசைப் போல்..தன்
இலாபத்தை
பார்த்தா எளியோர்மேல் பாசம்என
நடித்திருக்கும்?
காலமோர் முதலாளி யாய்எதனைச் சுரண்டிடலாம்
மேலும்” எனமுயன்றா
ஏழையின்முன் முறுவலிக்கும்?
‘காலம்,இயற்கை,விதி,
தர்மம்,அறம் என்னும்
ஏதேதோ சக்திகளால் உலகியங்கும்
சரிசமனாய்
நாளு”மென்று சொல்பவரே…
நாதியற்றோர் கீழ்ப்பட்டோர்
ஏழைகள் வலிமையற்றோர் சிறுபான்மை
எனும்நலிந்த
பாவச் சனங்கள்..தம்
படுகுழிக்குள் இருந்தெழும்பி
‘யாவரும் சமானம்” என்று நிமிர்வதனை
அடிமைத்தழை அறுக்க
ஆக்ரோஷம் கொள்வதனை
குடிமைப் படாமல் கொடியேற்றக் கெம்புவதை
பலம்முழுதை ஏவி
நசிக்க நினைப்போர்க்கு…
காலமும் அறமும் துணைபோகும்
யதார்த்தத்தைக்
காண்கையிலே ‘இவையும்’ ஆதிக்க சக்திகளின்
அருவ வடிவுதானோ..?சந்தேகம் எழுகிறது

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply