ஜெயிப்பமா?

ஈரமான இதயம் படைத்தவர்
எங்கு எங்கென நாற்திசை தேடினேன்!
பாரம் துன்பம் பகிர்ந்து சுமந்திடும்
பண்புளோர்களின் பாதமும் நாடினேன்!
கோரம் கொடுமை கண்டு குளிர்ந்திடும்
கொள்கையர்களே கூட்டணி சேர்ந்தனர்.
காரம் போனவர் தானே அனேகம் பேர்
கண்டு நானாய்த் தனித்து முயல்கிறேன்!

மற்ற உயிர்களின் மீது இரங்குதல்,
மற்றவர்களின் மேலே கரிசனை,
உற்றவர்க்கு உறுதுணையாய் நிற்றல்,
உதவி கேட்போர்க்கு உளத்தால் உதவுதல்,
பற்றுடன் விளம்பரம் இலாபம் பாராது
பணி புரிதல், ஏழை பங்காளியாய்
நிற்றல், என்பன…கானல் நீராகுமோ?
நிலத்தில் மனிதமும் நீர்த்தே சிதையுமோ?

மனிதராக வளர்ந்து உயர்ந்தனம்…
மனித மோங்க வாழ்ந்து மகிழ்ந்தமா?
புனிதர் என்றுநாம் பட்டங்கள் சூட்டினோம்
புண்ணியங்களைச் செய்து நிமிர்ந்தமா?
தனமும் கல்வியும் வீரமும் கொண்டனம்
தருமம், மெய், அறம், வெல்ல உழைத்தமா?
கனவில் மேன்நிலை கண்டோம்…நனவிலே
கழிவை விட்டுமே மீளோம்…ஜெயிப்பமா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply