கலைதூண்டும் சக்தி… கரையில்லாக் கல்வி
நிலைத்துயிர்க்க வைக்கும் நிபுணி -உலகவாழ்வின்
அர்த்தம் உணர்த்துகிற அன்னை…சரஸ்வதியை
வர்ணங்கள் பாடி வணங்கு.
எண்ணில் எழுத்தில் இணைக்கின்ற சொல் அடியில்
உண்மைக் கவியில் உறைந்தூறிப் -பெண்ணழகாய்
மின்னும் கலைஜோதி வீசும் அருளொளியால்
உன்உள் இருளை ஒழி!
வீணைச் சுருதியில் மேள இலயத்தினில்
பாணர் இசைப்பண்ணில் பாப்பொழிவில் -வாணி
இருப்பாள் இரசித்தே இதயம் தொலை…நின்
உருவுள் உறைவாள் உடன்.
பாட்டும் கவியும் பயன்பெருக்கும் பேச்சுகளும்
ஆட்டுகிற கூத்தும்ஆம் நாடகமும் -தீட்டுகிற
ஓவியமும் ஊற்றாய் உனக்குள் சுரக்கவைக்கும்
தேவியருள் தேடித் தெளி.
கலையரசி நல்கும் கலைஞானம் பெற்றே
நிலஇடர்நோய் நீங்க நிதமும் -கலையாடின்
உன்னிசையும் பாவகையும் ஓவியமும் நாடகமும்
துன்பமெலாம் போக்கும் துடைத்து.
நவராத் திரிநாளில் நங்கையிடம் வேண்டி
அவல் சுண்டல் வைத்து அகத்தில் -கவிசொல்வாய்!
கேட்டுக் கிறங்கி கிளைக்கும் இடர் துயரை
ஓட்டும் அவளின் உறவு.