முன்னூறு வருடம் நல்லூர்
முருகர்க்குச் சேவை ஆற்றி
அன்னவன் பெருமை காக்கும்
அரும்பணி செய்…மாப்பாணர்
சந்ததி தனிலே…பத்தாம்
தலைமை நிர்வாகி யாகி
நின்றைம்ப தாண்டின் மேலாய்
நிழல் தந்த…’எஜமான்’ எங்கே?
சண்முகன் நாமம் ஒன்றே
தன் உயிர் மூச்சாய்க் கொண்டு;
சண்முகர் குறிப்பால் சொல்லும்
தகவல்கள் கேட்டுச் செய்து;
உண்மை, அர்ப்பணிப்பு, நேர்மை,
உளத்தூய்மை, கட்டுப் பாடு,
எண்ணத்தில் உயர்வு, கொண்டு
இறைபணி புரிந்தார் வென்று!
‘அறங்(ம்) காவல் செய்த தேவர்!
ஆலயம் இன்றியங்கும்
முறைமையை, விரிவை, சொந்த
முயற்சியால் வளர்த்த வேந்தர்!
இறை எழில் பெருக்கி, நேரம்
தவறாதூர் இயக்கி, சொந்தப்
பெருமையைத் தாழ்த்தி, ஆடம்
பரம் விட்ட ‘முருக பித்தர்’!
மோனியாய்…நல்லைக் கோவில்
முழுமையாய்ப் படைத்த ‘ப்ரம்ம
ஞானியாய்’….எவர்க்கும் அஞ்சா(து)
எழில் வேல், வைரவரும் காக்க….
ஊன் பொருள் ஆவி ஈந்து,
ஒரு சித்தர் போல வாழ்ந்து,
யாழ் வரலாற்றில்… யாரும்
மறந்திட முடியாத் தீரர்!
உதாரணம் உலகுக் காகி…
உன்னத யாழ் மண்ணின் மாறாக்
கதி, கலாசாரம் கட்டிக்
காத்ததில் புதுமை கூட்டி…
விதி புதிதெழுதி… “யாரும்
வேலின் முன் சமனே” என்ற
அதிசயர்…அரசர் ஆண்டி
அனைவர்க்கும் எளிய அன்பர்!
இறை பணி தொடர எந்த
இடர் தடை வரினும் …ஏற்கார்!
“இறைக்கே எப் புகழும்” என்ற
இலக்கணம் சேய்க்கும் சேர்த்தார்!
இறப்பிலும்…தெய்வச் சேவை
இடையறா துயிர்க்க…இன்று
மறைந்தார்; நம் ‘குமார தாச
மாப்பாணர்’…வேல் தாழ் சேர்ந்தார்!