கானக் கருங்குயில் பாடும் -அதைக்
காற்றும் இரசித்துச் சுதிசேர்ந்து ஆடும்.
வானப் புருவத்தில் பூசும் -மஞ்சள்
வண்ணம் கதிரின் கரத்தில் ஒளிரும்.
மோனப் பெருவெளி எங்கும் -முகில்
முக்தியின் தத்துவம் கேட்டு மகிழும்
நானத் தனிமையின் வாசம் -நண்ணி
நாலு திசையையும் போற்றி நடப்பேன்!
பட்சியின் வாழ்த்தொலிப் பாடல் -விண்ணில்
பட்டுத் தெறித்துத் திசைகள் சிலிர்க்க
விட்டு விடுதலை யாகி -தென்றல்
மேன்மை கொள் வாசம் திசைதிக்கிற் தூவ
சிட்டு, சிறு பறவைக்கும் -நிழல்
சிந்தும் மரங்கள் நிலத்தைக் குளிர்த்த
கட்டணம் அற்றிக் கருணை -தனை
கண்டு உணர்ந்து இரசித்து நகர்வேன்!
பச்சை வயற்கரை ஓரம் -ஓடை
பாயும்…சிறு மீன்கள் குதுகலித் தோடும்.
மச்சம் விளையும் கடலின் -அலை
வந்து கரைக்குக் கொலுசுகள் பூட்டும்
உச்ச வரம் தரும் காடு -எங்கள்
ஊர்களுக்கு உயிர் ஊட்டிடும் ஆறு
நிச்சயம் சொர்க்கமாம் தேறு -தெய்வ
நீழல்… இதில் நாமும் வாழ்வதே பேறு!
என்ன அழகெங்கள் பூமி -அட
இந்த இயற்கைக்கு எது ஈடு காமி?
பொன்னும் மணிகளும் தந்து -எம்
புழுவுக்கும் புற்கும் புரந்திடும் மாமி
என்னும்…நிலந்தனைக் காத்து -எழில்
என்றும் குலுங்க அருளணும் சாமி!
இந்த எழில் நறை மாந்தி -நாமும்
இறவாச் சுகம் பெறவே வழி காண்…நீ!