மீட்பு

காற்று அறியும் கனகதைகள்.
கண்கண்ட
சாட்சியாய் நின்று மலைத்துத் தளம்பியோய்ந்த
ஆழக்கடலும் அறியும் பலவிடயம்.
காலடியில் வெள்ளைக் கம்பளமாய்
பொலிந்திப்போ
தானும் சிவப்பாய்க் கறைபடிந்து சாய்ந்திருக்கும்
கரையின் மணலும்
கனக்க அறிந்திருக்கும்.
தூர இருந்தாலும்
துல்லியமாய்க் கண்டிருந்த
வானும் முகிலும்..
வாய்ப்பிருந்தால் பலசொல்லும்.
அங்கே அழிவின் அறுதிக்
கணங்களிலே
தங்கி இருந்த தலை எதுவும்
நிமிர்ந்து..ஒரு
வார்த்தை உரைக்க வழியற்று
மயானவெளி
போலக் கிடக்குதந்தப்
பொசுங்கிய திசைதிக்கு.
ஆயிரம் ஆயிரமாய் அவல அலறல்களின்
ஓலங்கள்
கெஞ்சி மன்றாடி வெடிமழைக்குள்
வீழ்ந்த சரிதங்கள்ளூ
பசி மயக்கம் பயம் விரட்ட
கையாலா காமல் உயிர்விட்ட கறுமங்கள்ளூ
யார்யார் இருந்தார்கள்?
யார்யார் தொலைந்தார்கள்?
யார்யார் பிழைத்தார்கள்?
யார்யார் புதைந்தார்கள்?
யார்யார்தான் எங்கோ இப்போ இருக்கிறார்கள்?
அந்தக் கொடுஞ்சுமையை
அனுபவித்த தோள்களெவை?
அந்த அழிவுகளைக் கண்ட விழிகளெவை?
பித்துப் பிடித்தவராய்,
பிரமை பிடித்தவராய்
செத்தவர்போல் இந்தத் திசைத் துயருள் மூழ்கியோரும்
எங்கே சிறைப்பட்டார்?;
எங்கே சிதைந்துள்ளார் எங்கே இவர்மீண்டும்…
இழந்ததெல்லாம் மீட்டெடுப்பார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply