யாரை விரும்புவது?
யார்யாரை வெறுப்பது?
யாரை இரசிப்பது?
யார்யாரை மறுப்பது?
யாரைப் புகழ்வது? யார்யாரை இகழ்வது?
யாரை இணைப்பது?
யார்யாரைத் தவிர்ப்பது?
யாரைத்தான் வாழ்த்துவது?
யார் எவரைத் தூற்றுவது?
ஆம்…இஃது அவரவரின் விருப்பம் சுதந்திரம் காண்!
யாதை விரும்புவது?
யாதெதனை வெறுப்பது?
யாதை இரசிப்பது?
யாதெதனை மறுப்பது?
யாதைப் புகழ்வது?
யாதெதனை இகழ்வது?
யாதைப் பெறுவது ? யாதெதனைத் தவிர்ப்பது?
யாதைத்தான் வாழ்த்துவது?
யாதெதனைத் தூற்றுவது?
ஆம்…இஃதும் அவரவரின் விருப்பம் சுதந்திரம் காண்!
“ஏன் யாரை எதனை விரும்பினீர் வெறுத்தீர்கள்
நீவிர்”? என்று யாரும்
எவரையும் கேட்டுவிட
ஏலாது என்பதுதான் யதார்த்தமும் சட்டமதும்!
ஆனால்…’சனநா யகம்’ தந்த
சுதந்திரத்தால்
சற்றே தனக்குப் பிடிக்கவில்லை
என்பதற்காய்
மற்றவரின் உரிமையை மறுதலித்து
அவரை ஒரு
குற்றவாளி போன்று
கொடும் தண்டனை தீர்க்கும்
ஊடக அராஜகம்!
உண்டா அதில் தர்மம்?
தூசித்துச் சுய இன்பம் காணும் வலைத்தளமும்!
நீதி நெறி பார்க்க நினைக்காது
அதிகாரம்!
யார்தான் மதித்தார்
தனி மனித உரிமையையும்?
மற்றவரின் எண்ணத்தை விருப்பத்தை
மறுதலித்து,
வற்புறுத்தி அடக்கியவர்
வாயை அடைக்கின்ற
அற்பத் தனம்புரியும் இதுவும்
புதுப் பாசிசம்…ஆம்!