தென்றல் தனில்ஊறித், திசையெல்லாம்
சென்றோடி,
மன்றேறி,
தாய் மண் மடியில் மழலையென
நின்று மெருகேறி,
நிலவுக்கும் கைநீட்டி,
அன்றே விதியின் அறத்தின் பொருள்பேசி,
புன்னகைத்து யாரும்
பொய்புரட்டோ டணைக்க வந்தால்
பார்வைச் சுடராலே பஸ்பமாக்கி,
எண்திசையின்
வேர்வரையும் மேவி, முழுப்
பரம்பரைக்கும் மின்னேற்றி,
வென்ற தமிழே…
நினதடியில் விளைந்து துள்ளும்
கன்றானேன்!
நீயுன் கடைக்கண்ணைக் காட்டிவிட்டாற்
போதும்… புவிவாழ்வின்
புதிரவிழ்த்துப் புதுமைகாண்பேன்!
காலம் கடந்தவளே,
கற்போ டிருப்பவளே,
சீலம் மிகுந்தவளே,
தேயாக் குளிர் நிலவே,
சூரியனாய் இன்றும் சுடரும் ஒளிமகளே,
சாலச் சிறந்தவளே,
தலைமுறை பல் ஆயிரங்கள்
கண்ட ஞானக் கண்ணழகி;
இன்றும் கருணைகுன்றாக்
கட்டழகி;
கோடிப் பெருமை கொண்ட காவலர்கள்
கட்டியே காத்த கலையழகி;
கவிவகைகள்
கொட்டிக் கிடக்கும் குலத்தழகி;
வாடாத
மொட்டழகி;
முக்காலம் தன்னில் கலையாத
பொட்டழகி;
வேறு மொழி காணாப் புகழ்…அன்றே
எட்டி…அவை இன்றும்
எதிர்காலத்திற்கும் அருளைக்
கொட்டவல்ல செல்வம்
குறையாப் புவியழகி;
‘கீழடி’ வியக்கும் கிழவி;
எனினும் இளஞ்
சீரழகு சிதையாது சிரிப்பதிலே இன்றும் நீ
பேரழகி;
மூப்புப் பிணி நெருங்காக்
கவர்ச்சியுடன்
தேரேறி எட்டுத் திசையளக்கும் விண்ணழகி;
பேதம் பிளவுகளால்
பீடழியா ஓர்அழகி;
ஆதித் தமிழழகி;
அனைவருக்கும் நீஅழகி;
ஏதும் நிறம் வடிவம்
இயல்பு சாதி அடையாளம்
சூட்டி, ஒரு வட்டத்துள் சுருக்கி,
‘இவள்’ சக்தியினை
ஏட்டிக்குப் போட்டியிட்டு இளக்கி,
அடக்காதீர்!
‘அகரத்தைத்’ தொன்மைச்
சுருதியாகக் கொண்டுயர்ந்து
‘ழ’ கரத்தி னாலே
தனித்துவங்கள் காத்துயிர்த்த
புகழை ஒருவரிக்குள்
பூட்ட முயலாதீர்!
பல்லாயிரம் ஆண்டு
பலநூறு சவால் வென்று,
தொல்லை துயர் சுட்டு,
தொடர்ந்து தனைவளர்த்து,
வல்லமையோ டின்றும் வலிமைபெற்றுத்,
தன்பார்வை
எல்லை விரித்தின்றும் செழித்து,
இன்னும்இன்னும்
பல்லாயிரம் ஆண்டு பயணித்துச்,
சேய்களுக்கு
நல்லமுதம் நல்கும் நலத்தோடே
ஆள்கின்றாள்…
மல்லுக்கு நின்றவளின்
வழியை மறிக்காதீர்!
அற்புதங்கள் மைந்தருக்கு அருளும்தாய்…
எதிரிகட்குக்
கொற்றவைதான்…
கொஞ்சிக் குலவுவோர்க்குக் காதலிகாண்…
அவள் உருவம்
இதுதான் எனத்தீர்ப்பை எழுதாதீர்!
அவளிடத்தில்
விதவிதமாய்ப் பெருமைகள் இருக்க..அதில்
ஒன்றைமட்டும்
“இதுதான் அவள்இயல்பு”
என நிறுவ முயலாதீர்!
நீங்கள் நிறுத்து விற்க
அவள் மகிமை அற்பமில்லை!
நீங்கள் நும் விருப்பு வெறுப்புக்கு
ஏற்ப அவள்
பாங்கை அடையாளப் படுத்த
அவள் செழுமை
தேங்கவில்லை;
தேறும்..அவள்
சிறப்புக்கோ எல்லையில்லை!