யார் தான் உழைப்பாளி இந்த உலகிலே?
யார் தாம் ‘உழைப்பவர்’ இந்தப் புவியிலே?
வேர்வை வார்த்து, நரம்பு தசைகளில்
வியக்க வைத்திடும் சக்தி பிறப்பித்து,
ஊரை ஒவ்வொரு கற்களைக் கொண்டுமே
உயரச் செய்து, உழைப்புக்கு ஏற்றதாய்
ஊதியம் அற்று, வறுமைக்கு வாழ்க்கையை
உணவென் றாக்குவோர் தாம் பலர் மண்ணிலே!
”இல்லாரும் இ(ல்)லை..இருப்பார் களும் இ(ல்)லை
எல்லாமும் யார்க்கும் சமனென வாயப்பதே
நல்ல” தென்றிடும் தத்துவம் நல்லதே!
நடைமுறை தனில் வந்ததா? இல்லையே!
வல்லரசர்கள் ஏழை உழைப்போரை
வறுத்து வாட்டி அவர்ஆற்றல் யாவையும்
மெல்ல உறிஞ்சிக் கொழுக்க…உழைப்பவர்
மிஞ்சும் சக்கையாய்ப் போவதும் உண்மையே!
உழைப்பவர் ‘மே’ தினத்தினில் மட்டுமே
ஊர் உலகதன் கண்ணில் படுகிறார்.
களைத்து…மிச்ச நாள் எல்லாம் அவ் ஆண்டிலே
கருகி வேகுவார். வளம் பலம் சேர்த்திடார்.
எழும்பும் கோஷம் எண் திக்கும் தனித்தனி.
இதில் அரசியல் இலாபப் பலன் தனி.
பிழை மலிந்த யதார்த்தம்…உழைப்பவர்
பெருமை பேசும்; தீர்க்கா தவர் பிணி!
“இங்கு நாம் இனி ஓர் விதி செய்குவோம்”
என்று பாடிய பாடல்கள் எத்தனை?
எங்கு போச்சு அப் பாடல்கள், அவ் விதி?
என்ன ஆயின வர்க்கப் புரட்சிகள்?
பங்கம் சூழ்ந்துதான் பாட்டாளி வாழ்கிறான்!
பண முதலைகள் வாயுள் தான் மாய்கிறான்!
மங்களம் வரும் வருமென நம்பியே
மறைகிறான்! இது தானே யதார்த்தமாம்!
பணம் பணத்தோடு சேரும்; அவர்பணம்
பல்கிப் பெருகிடும்; ஏழைகள் மென்மேலும்
குணம் குறி வாய்ப்பு வசதியில் ஏழ்மையாம்
குழியில் ஆழப் புதைவார்; உழைப்போரை
வணங்கும் ஓர்தினம்…ஏனைய நாட்களோ
வளம் படைத்தோர்க்கே சாமரம் வீசிடும்.
பணக்கொடி ஆளும் பாரினில் செங்கொடி
படபடக்கும் ‘மே தினத்தில்’…இதே நிசம்!