இயற்கை நீதி

போலிகளின் முகத்தில் கரிபூசுமாம் காலம்!
வேசங் களுக்குள் விழுந்து;
முகமூடி
பூண்டு தம் முகத்தைப் புதைத்து;
தங்களது
உண்மைச் சுயரூபம்
ஊத்தை மணம் ஒளித்து;
அரிதாரப் பூச்சுள்
அகக் காழ்ப்பு, வன்மத்தை
மறைத்து;
உடை ஆடை அணிமணிக்குள்
அகங்காரம்
மமதையை அடைத்து;
நகைகளுக்குள் பூச்சுகளுள்
தமது பலவீனம் தாட்டு;
மனதுளுள்ள
மிருகக்குணம் காத்து;
வெளியினிலே தேவர் இறை
உருக்கொண்டு திசைதிக்கை நம்பவைத்து;
சபையேறி
தாம்தான் தலைவர்கள்,
தாம்தான் அரசர்கள்,
தாம்தாம் சமூகத்தைச் சமைக்கும் ‘நளபாகர்’,
தாம்தாம் நாளையை
நகர்த்துகிற நாயகர்கள்,
என்று….புது வேடம் ஏற்று
தம்நலத்தை
நன்றாகப் பார்க்க நடிக்கும்…
சுயலாபம்
என்றென்றும் தேடுதற்கு ஏங்கும்…
யதார்த்தத்தில்
ஏதுமே செய்யுமாற்றல் இன்றி
வெறும் வாயால்
பூமியொன்றைப் புதிதாய் அமைப்பமென
புழுகிவாழும்…
போலிகளின் முகத்தில்
கரிபூசுமாம் காலம்!
யார் மெய்யர் பொய்யர்,
யார் மீட்பர் கூற்றர்,
யார் மேய்ப்பர் ஏய்ப்பர்,
யார் அன்பர் பகைவர்,
யார் இறைவர் பேய்கள்,
என்பதனை நிரூபித்து
ஊரைத் தெளியவைக்கும்
இயற்கை நீதி வரலாறும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.