வாழவே வழியற்ற நாட்டிலே
வாழ்வதென்பதோர் சாதனை.
வாழ்வு என்பதன் அர்த்தம் என்பதை
யார் உணர்ந்தனம்? போதனை-
நாளும் செய்கிறார் நியாயம் சொல்கிறார்
நம்மைப் பீடித்த பேய்தனை
நம்பும் வண்ணமே ஓட்டலை; இனி
நாளை தீருமோ சோதனை?
ஓர்சிலர் உயர்ந்தோங்க …ஏனையோர்
ஊட்டினார்கள் தம் சக்தியை.
ஊமையாய் அவர் பேச வில்லையாம்
உருக்குலைத்தனர் புத்தியை.
தீர்வு தந்திடார் தேங்க வைத்துத்
திரட்டுவார் தம்மில் பக்தியை
தேவர் போல் நின்று திருடும் பொய் விழ
தீட்டவும் வேண்டும் கத்தியை.
யாவரும் சமன் யாரும் ஓர் நிகர்
யாம் இந்நாட்டதன் மன்னவர்
தாம்…என்றெண்ணிடாத் தாழ்வுயர்வுகள்
சாற்றி நின்றதால் அந்நியர்
ஆகி யாவரும் தாழ்ந்தனம்…உயிர்
வாழ இலாயக்கு அற்றவர்
ஆகினோம்; இதை மாற்ற யாவரும்
மன்னர் என்போம்…வராதிடர்.