தானெங்கே நகருவது என்று தெரியாமல்,
தான்போகும் பாதை சரியா
அறியாமற்
தான்…ஒரு நத்தை
தன்பாட்டில் ஊர்ந்தபடி
போகிறது!
ஏதும் புசித்துக் குடிக்கு(ம்) வாழ்வைக்
காண முடியுமென்று கடக்கிறது
பெருந்தெருவை!
சந்தடியை உணராது,
சாலையதா? வெளி தானா?
என்று தெளியாது,
எங்கே போய்ச் சேருவது
என்று புரியாது ஏகிடுது!
தன் விதி என்-
னென்றும் உணராது
தன்பாட்டில் செல்கிறது!
எந்தத் திசைதிக்கால் எவ் வாகனம் வருமோ?
வந்த சில்லு கடக்க விடுமோ?
மேல் ஏறிடுமோ?
சின்னப் பொடியள் தேடிவந்து மிதிப்பாரோ?
கண்ட பெரியர்
கருணைகாட்டா தகல்வாரோ?
என்ற கவலையற்று;
இவைபற்றிக் கிஞ்சித்தும்
எண்ணத் தெரியாது;
அடுத்தகணம், எதிர்காலம்,
என்னதான் ஆகிடுமோ என்ற பயங்களற்று;
என்ன இடர் தொடரும்
என்ற தயக்கமற்று;
தன்னுலகம் தாண்டியெதும் காணாது;
தனைச்சுற்றி
என்ன நடக்குதென்று…
என்ன நிலை மாறுதென்று…
ஒன்றும் உணராது; ஊர்கிறது!
நாங்களும் தான்….
நெடுஞ்சாலை கடக்க நினைத்து
அங்கெதும் வாழக்
கிடைக்குமெனப் போகும் நத்தையைப்போல்
கொடுங்காலம்
என்செய்யும் எமையும் இத்
திசையின் எதிர்காலம்
தன்னையும்…என்று
சற்றும் அறியாமல்…
என்னென்ன ஆபத்துத் தொடருதென விளங்காமல்…
என்னாகும் அடுத்த கணம், நாளை
என்றெதிர்வு கூறும்
சின்னத் திறன் கூடத் தெரியாமல்…
‘சிவன், சித்தன்’
என்ற நிலை, போக்கில்
ஏமாளி மந்தைகளாய்
சென்றுகொண் டிருக்கின்றோம்!
என்றெம்மை நாம் அறிவோம்?