வெற்றிடம்

ஆகக் குறைந்தபட்சச் சாத்தியம்
அனைத்துமே…
சாவின்வாய் பட்டுச்
சரிந்துகொண் டிருக்கின்ற
கேவலமோ நெஞ்சிற் கொள்ளி செருகிடுது.
தேடிய தேட்டம்,
திரட்டிய கௌரவம்,
பேசிய வார்த்தை,
பிசகாதெனும் எண்ணம்
யாரும் எரிக்க முடியா தெனும்துணிவு,
வெட்டத் தளைக்கும்
விருட்சமென்ற ஓர்நிமிர்வு,
பட்ட அவலம்
பலியிட்ட செல்வங்கள்,
எல்லாம் விழலுக்கு இறைத்தகன்ற நீராச்சு.
எத்தனை இழந்தும்
இறுதியில் பலன்கிட்டும்
அத்தனையும் மீளும்
என்றுரைத்த ஆரூடம்
அத்தனையும் பொய்த்து
அகத்தின் ஏக்க இமயமலை
முற்றாய்ச் சிதறி
முழுதும் பொடிப்பொடியாய்
அர்த்தம் இழந்து
அவல முகில் சூழ்ந்து
காற்றில் எலாம்கரைந்த காதை
பரவிஎங்கும்
ஏற்பட்ட வெற்றிடத்தில்
எமைமூடும் சூனியத்தில்
வசந்தமொன்று வீசுமென்றே…
வாய்கள் உரைத்திடுது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply