உண்மை

உண்மை உணர்ந்தோன், உண்மை அறிந்தோன்,
உண்மை தெளிந்து
உலகுக் குரைக்கவல்லோன்,
உண்மையை நம்புபவன்,
உண்மையை உணர்த்துபவன்,
உண்மைகளை ஒப்பிட்டு
உயர்வு தாழ்வை நிறுப்போன்,
உண்மையை உண்மையாய் உரைக்க
ஒருபோதுமஞ்சான்!
உண்மையைப் புரியார்,
உண்மையை விரும்பார்,
உண்மை உணர்ந்தும்
அடாத்தாய் மறுதலிப்போர்,
உண்மை கசக்க…
உரைத்தவனைத் தூற்றுபவர்,
பண்ணுகிற சேட்டையின் முன் பணியான்!
அன்னவர்கள்
பண்ணும் அரசியல் முன் பதறான்!
தான் சொன்ன
“உண்மை உண்மைதான்
அதை மீளப் பெற மாட்டேன்”
என்பான்;
மிரட்டி எதிர்ப்போரின் முன் அடங்கான்!
உண்மையின் பக்கத்தில்
உறுதி தளராது நிற்பான்!
உண்மையின் கசப்பை ஏற்காரைப்
புறக்கணிப்பான்!
உண்மையின் தகிப்பை
உணர்ந்தறியா மூடரினை
எண்ணான்; கணக்கில் எடுக்கான்!
அவன் நேர்மை,
உண்மை, அவன்மேல்
விழுந்த பழிச்சொல்லைத்
தின்னும்; அவன் சிறப்பைத்
திசையெட்டும் தொழச்செய்யும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.