கற்பனைத் தீனி

வைரங்களை ஏற்றிச் சென்ற
மூன்றாம் பிறை நிலவுப்
படகு கவிழ்ந்ததோ?
வானக் கடலெங்கும்
விண்மீன் வைரங்கள் சிதறி
மின்னிக் கொண்டிருக்கு!
முகில்களாம் சாக்குகளில்
முடிந்தவரை அவற்றை அள்ள
அலைகிறது காற்று…ஆம் மூச்சுக் காட்டாது!
வைரக் கனவுகளைக் கண்டபடி
வெறுங் கூழாங்
கற்களை அளைந்தளைந்து
கரைகிறது என்நினைவு!
கற்பனை என ஒன்றும் இல்லாட்டில்
இவ் உலகில்
சற்றேறக் குறைய முக்கால் வாசிப் பேர்கள்
ஏக்கங்கள் தீராது,
எதையும் கண்டடையாது,
தீயவற்றைச் செய்தேனும்
சுகங்களினைக் கண்டு,
அதால்
தீராக் கவலைகளில் சிதைந்து,
மனம் நலிந்து,
சாவை அணைப்பவராய்த் தாமிருப்பார்
உண்மை இது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.