யாவர் எங்களைக் காத்திடும் காவலர்?
யாவர் எங்களை மீட்டிடும் தூதுவர்?
யாவர் எம்மில் கரிசனை கொண்டவர்?
யாவர் எங்கள் சரிதம் நினைத்தவர்?
யாவர் எங்கள் கருத்தைக் கணித்தவர்?
யாவர் எங்களின் விருப்பினை ஏற்றவர்?
யாவர் எங்கள் சுயத்தை மதித்தவர்?
யாவர் எங்களை மனிதராய்ப் பார்த்தவர்?
தங்கள் தங்கள் நலத்தினைக் காக்கவும்
தங்கள் சந்தை வளத்தை வளர்க்கவும்
தங்கள் பெருமை புகழைப் பெருக்கவும்
தங்கள் ஆதிக்கப் போட்டியில் வெல்லவும்
எங்களைத் துரும்பாக நினைத்து…எம்
இழப்பு ஈகத்தைத் துச்சமாய்ப் சாய்த்து…நாம்
தங்கி வாழவே வைத்தோர், சிரிக்கிறார்!
தமது வெற்றிக்கெம் வாக்கையும் கேட்கிறார்!
வலுக்குறைந்தனம், வலிமை தொலைத்தனம.;
மலிந்து எடுப்பார்கைப் பிள்ளையாய் வாடினோம்.
பலவினப் பட்டோம், பயனெதும் கண்டிலோம்
பலதும் பத்தும் இழந்தோம், வழியற்றோம்,
பலப் பரீட்சை யார் யாரொடோ செய்ய…நாம்
பேயராகி ஏமாந்தோம், தவறினோம்.
தலையெடுக்க முடியாதும் ஒடுங்கினோம்
தளைத்து நாளைஎவ் வாறு எழும்புவோம்?