நல்லூரை நவீன மாக்கி
நாற்றிசை வியக்க ஏற்றி
வல்ல நிர்வாகத் தாலே
வான் வரைப் புகழைச் சாற்றி
பல்வேறு புதுமை கூட்டி
பாருக்கு எடுத்துக் காட்டின்
எல்லையாய்…வளர்த்த தெய்வ
எஜமானார்க் கெமது போற்றி!
ஐம்பது ஆண்டின் மேலாய்
ஆலய வளர்ச்சிக் காக
தம் உடல், பொருள், தம் ஆவி
தந்து… அற வாழ்வு வாழ்ந்து…
நம்பிக்கை விசுவாசத்தை
‘ஞானவேல்’ மேற் தான் வைத்து
செம்மை சேர் ‘குமார தாசர்’
திகழ்ந்தார்…நாம் வியந்தோம் பார்த்து!
நிர்வாகத் தெளிவு, நேர்த்தி,
நேரத்தில் முகாமை, தெய்வ
கர்மம் தான் முதலில், யாரும்
கந்தன் முன் சமானம், என்று
கர்வங்கள் அற்று… வேலின்
கவினுள்ளே அருளின் ஆழ்ந்த
அர்த்தம் ஊர் புரிய வைத்த
அதிசயர்…’ குமார தாசர்’!
ஓராண்டு கடந்து போச்சா?
ஒளி வடிவாகி …நல்லை
வேலன் தாழ் நிழலில் வாழும்
செயல் வீரர் ‘குமார தாச
மாப்பாணர்’ குகன் சொல் கேட்டு
வரலாறு படைத்தார்; அன்னார்
பேர் என்றும் புவியில் நீளும்!
பெருமையோ நிலைத்து ஆளும்!