கொடுப்பினை

கவிதையெனத் திரிந்தவள் தான் அன்று;
“கவினினிலே
அவளுக்கு நிகர் அவள்தான்”
அயல் வியந்து போற்றிற்று!
“எவருக்குக் கொடுப்பினையோ” என்று
பலர்…பின் அலைய
அவள் தொலைந்து போனாள்
அடர்ந்த வனமொன்றுள்!

நேற்றவளைக் கண்டேன்…
நிற்கவே முடியாத
தோற்றத்தில்;
‘கொடுப்பினை’ பெற்றதிரு ஊன்றுகோல்கள்!
நினைவுகூரும் தூபியின் முன்
எவரெவரோ மலர் தூவ
கனமனதோ டெட்ட நின்று
கண்ணீர் மலர் சொரிந்து
திரும்பினாள்;
அவள் நனவை நகர்த்துதற்கு
இல்லை கால்கள்!
“இருக்கும்” என்பேன் அவளுடைய
கனாக்களுக்குப் பல கால்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.