மழைவிட்ட பொழுது

மழைவிட்டு விடுமென்று மறுபடி அறிவிப்பு!
மழைவிட்டு விடும்போலத் தானே
ஒருவெளிப்பு!
கடந்த சிலநாளாய்க்
கறுத்த திசைகளிலே..
கசிந்து பரவிடுது மெல்லிய ஒளிக்கீற்று!
மப்போடு மந்தார மாயும்
இடைக்கிடையில்
தெப்பமாய் நனைத்தும் தூறி
அழுகுணிபோல்
வானம் அரைகுறையாய் வழிகிறது.
இரவிரவாய்
கொட்டி…வீட்டுள் குதித்து குளிர்விதைத்தெம்
திட்டுக்கள் வாங்கிவெள்ளம்
தெருவில் அனாதையாச்சு.
எத்தனை இடைஞ்சல் என்றாலும்
அசௌகரியம்
எத்தனைதான் என்றாலும்
பேரிரைச்சல் போட்டுமழை
நிலங்களை வாரடித்து நிறைகையிலே
வயல்களொடு
குளங்களைக் குளிப்பாட்டிக்
கொட்டிப் பொழிகையிலே
ஏதோ ஒரு’நிறைவில்’
இதயம் சிலிர்த்திடுது.
மழைவிட்டு விடுமென்று மறுபடி அறிவிப்பு!
மழைவிட்டு விடும்போலத் தானே ஓருவெளிப்பு!!
மழையில்லை இனியென்றும்…
மீண்டுமொரு தாழமுக்கம்
வருமட்டும்
மழைதந்த சுகம்தோன்றாது இங்கென்றும்…
நினைக்க ஒருவரட்சி
எனைச்சூழ்ந்து கொண்டுளது.
எனினும் மனதிலிப்போ
மழை ஈரம் கசிகிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply