சூழுகின்றது நாளும் தீயிடர்.
தொற்றுகின்றது தீமை நோய் நொடி.
மாழுகின்றது மண்ணின் மாண்புகள்.
மாறுகின்றது வாழ்க்கையின் திசை.
தாழுகின்றது எங்கள் எண்ணங்கள்.
சாய்ந்து போகுது பேர் புகழ் பொருள்.
அள வந்தன அஞ்ச வைப்பவை.
யாவர் மீட்பது எம் தலைகளை?
யாதொரு துணை அற்ற பாவிகள்
யாவையும் தொலைத்திட்ட பேதையர்
போரிலும் பலத்தை இழந்தவர்
போய்த் திசையெலாம் பிச்சை கேட்பவர்
பூர்விகர் … எனும் போதும்…அந்நியர்
போல அண்டியே வாழ் அடிமைகள்
வேர் அறுந்தவர் வேதனை அனல்
வீழ்ந்து இன்றும் துடிதுடிப்பவர்!
எங்கள் திட்டுகள் ஏன் வதைக்கலை?
இட்ட சாபங்கள் ஏன் பலிக்கலை?
எங்கள் நேர்த்திகளுக் கேன் பலனிலை?
எங்கள் வேண்டுதற் கேன் பதிலிலை?
இங்கு வாழ்கிறோம்… ஏழ்மை யோடுயாம்
எம் உழைப்பை கை விட்டு தாழ்கிறோம்
தங்கி வீழ்கிறோம்…என்று கெம்புவோம்?
தடைகள் சாய்ந்திடும் நாளுக் கேங்குறோம்!