மந்த மாருதம் என்றுதான்…புயல்
மாற இங்கு பணித்தவா!
மர்மம் யாவும் அவிழ்ப்பவா! எங்கள்
வாழ்வை நாளும் வனைபவா!
பந்த பாசம் வளர்ப்பவா! செய்த
பாவம் போக்கத் துவைப்பவா!
எந்த நேரமும் சொந்தமாய் எமை
எண்ணும் ‘நல்லையூர்க்’ கந்தையா!
கல்லிலே சிலை என்றுனை நிதம்
கண்களாலே வணங்கிடோம்.
காய்த் தொளிர்ந்துயிர் வாழ்ந்திடும் ’கரு-
ணைக்கடல்’ என்றுணருவோம்.
“சொல்லிலே உரைக்கின்ற ஓர் பொருள்
சுட்டுமா உனை” கேட்கிறோம்.
சோர்கிறோம்…உந்தன் பேரருட் திறம்
சொல்ல வாயற் றயர்கிறோம்.
நல்லையூரதன் நாயகா…எழில்
நாதனே வேலை வீசிவா!
நம்மில் வாழ்ந்திடும் ‘ஆணவம், கன்ம,
மாயைச்’ சூரரைச் சாயடா!
மல்லுக் கட்டிடும் ஊழ்வினை, விதி
மாய்த்து நிம்மதி தாறியா?
வந்திங்கே ’உப வாசமும்’ புரி
மாந்தரின் துயர் தீரடா!
“கந்தசாமியார் எங்கள் சாமியாய்க்”
கண்டுணர்ந்து வணங்கினோம்.
கண்ணை மூடி உள்… ‘சண்முகர்’ முகம்
காண நித்தம் முயல்கிறோம்.
‘கந்த ஷஷ்டியில்’ தேவர் போல்…இடர்
கட்கு நீ பதில் சொல்லென்போம்.
காதலித் துனைப் போற்றுவோம்; எங்கள்
கர்மம் போக்கிட நேருவோம்.
எந்த நேரமும் எங்களோ டிரு
எங்கள் சஞ்சலம் தீர்த்திடு.
இந்தப் பொய்யுடல், ஏங்கிடும் உயி-
ரின் வலிகளைத் தீய்த்திடு.
அந்தரம் மிகும் வேளையில் மன
ஆறுதல் தர வந்திடு.
ஆயுளின் நிழலாய் இரு…தொடு
ஆன்ம ஈடேற்றம் தந்திடு.