அவரவர் அரசியல்முன் நான்

நல்லவன்நான் என்றும்
தீயவன்தான் என்றும்
சொல்லுகிற சொல்…மெய்யைச்
சொல்லுதென்று நான்ஏற்கேன்.!
அவரவர்கள் தத்தம் அகத்தின் விருப்பு
வெறுப்புக்கு ஏற்ப
வெளிவிடுவார் தம்முடிவை.!
தங்கள் விருப்புக்கு
தங்கள் செயல்களுக்கு
தங்கு தடையற்றுத் தயைபுரிந்தால்…நல்லவன்நான்!
ஆற்றுப் படுத்தி
அவரவர் விருப்புக்கு
ஏற்ப இயையாது திருத்தி அவரவரும்
செய்வதெல்லாம் செய்ய விடாட்டிலோ…தீயவன்நான்!
வாழ்ந்தாலும் ஏசி
தாழ்ந்தால் அதற்கும்ஏசும்
சுயநலமே உருவான சூழல், சமூகத்தில்
போற்றுதலும் தூற்றுதலும்
பொருளற்றுப் போனதென்பேன்.
ஏதும் பலன்பெற்றால் வாழ்த்துவதும்
பலன்அற்றால்
பேயனெனத் தாழ்த்துவதும்
பிழைப்பாச்சு எங்குமென்பேன்.
எவரினது வாழ்த்துதலும்,
எவரினது தூற்றுதலும்
அவரவர் விருப்பு-வெறுப்பின் விளைவென்பேன்.
போற்றுபவர் போற்றட்டும்
புழுதிவாரி அறம்புறமாய்த்
தூற்றுபவர் தூற்றட்டும்
தொடரந்தென் வழிதொடர்ந்து
செல்வேன்
சுயநலத்தார் தரும்பட்டம்
தனைமதியேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply