எல்லோரும் தம்மை ஏதோ ஒருவிதத்தில்
எல்லோர்க்கும் நிரூபிக்கும்
எத்தனத்தோ டியங்குகிறார்!
ஒருவர் எழுதுகிறார்.
இன்னொருவர் பாடுகிறார்.
ஒருவரோ ஆடுகிறார்.
வேறொருவர் கீறுகிறார்.
ஒருவர் இசைக்கின்றார்.
மற்றொருவர் பேசுகிறார்.
ஒருவர் அணைக்கின்றார்.
பிறரொருவர் அடிக்கின்றார்.
ஒருவர்… எல்லோரும் “அரோகரா”
என்றார்க்கையிலே
பெருங்குரலில் “ஐயோ”என் றலறிக்
கவனமீர்ப்பார்!
எல்லோரும் தம்மை
ஏதோ ஒரு வழியில்
எல்லோர்க்கும் நிரூபிக்கும்
எத்தனத்தோ டியங்குகிறார்!
எல்லோரும் “தாமும் இருக்கின்றோம்
குதிர்க்குள்” என
எல்லோர்க்கும் காட்ட
இயன்றவரை முயல்கின்றார்!
தம்மை நிரூபிக்கும்,
தம்மை முன்னிலைப்படுத்தும்,
தம்மைத் தம் பேர் புகழை
மட்டும் எங்கும் முன்னிறுத்தும்,
தம்மை எதோவிதத்தில்
பெரியோர்கள் எனக்காட்டும்,
தம்மைச் சிறப்பானோர் எனச்செப்பும்,
மற்றோர் முன்
தம்மை உயர்ந்தோர்கள் எனச் சொல்லும்,
“முதலுரிமை
தம்மைத்தான் சேர்ந்தது”
என்பதனைச் சாற்றி நின்று…
தம்மேற் தான் முதல் மாலை
தவழ்ந்ததெனப் புளகித்து….
தாம் ஆற்றல் மிக்கவர்கள்;
தாமே திறமையாளர்;
தாமே பல வகையில்
தரத்தில் சிறந்தவர்கள்;
தாம் யார்க்கும் தாழ்ந்தோர் அல்லர்;
என உரைக்க
ஏதோ முறையில்
இடையறாது இயங்குகிறார்!
தாமின்னும் ஓயவில்லை,
தாமின்னும் தேயவில்லை,
தாமின்னும் வீழவில்லை,
தாமின்னும் சாகவில்லை,
தாமின்னும் இருக்கின்றோம்,
தாமின்னும் உயிர்க்கின்றோம்,
தாமின்னும் முயல்கின்றோம்,
தம் சக்தி தீரவில்லை,
தாமின்னும் தோற்கவில்லை,
என்பதனைக் காட்டுதற்கே
மோதுகிறார்!
ஆணவமோ, தன்முனைப்போ,
அகங்காரம்
மமகாரம் தானோ…
அனைவரதும் உள்ளிருந்து
சமயங்கள் சந்தர்ப்பம் பார்த்து இடையறாது
இயக்குவது?
உடம்பில் எலும்பு தசை நரம்பும்
இயங்காத போதும்
‘தம் இருப்பை’ உறுதிசெய்யத்
தயங்காத…’தணியாத தாகம்’
அனைவரையும்
இயக்கிடுது!
இவ்வாறு இயக்குவது ‘யார்- யாது’?
‘காலம் நிரூபிக்கும் நிஜத்தை’
எனும் மெய்யும்…
காலம் தான் சகலதையும் கணிக்கும்
எனும் தீர்ப்பும்…
யார்க்குப் புரிகிறது?
யதார்த்தம் எவர் எவர்க்கும்
வேம்பாய்க் கசந்தாலும்
வீம்பா குறைகிறது?