வாழ்க்கைப் போர்

கனவோடு வந்தது கனவோடு போனது
கவியாக வில்லை எதுவும்.
கவியான யாவுமே கனவிலும் கண்டிடா
கதையாச்சு என்ன உலகம்?
மனமென்னும் பூநிதம் மலர்ந்தாலும் சூழ்துயர்
மலர்வாட வைக்கும் பொழுதும்
மடியாமல் மீண்டுமே பயிராகும் வாழ்வு ஓர்
வனமாதல் எங்கள் சரிதம்.

பயிரொன்று வாடிட அதுகண்டு வாடிடும்
படுபாவியான மனது
பலிகேட்கும் பூமியில்…பலியாகும்! வாடிடும்
பயிர்மீள நீரை உதவு.
உயிரொன்று போகலாம் உடல்நூறு சாயலாம்
உடையாமல் துன்பம் பழகு.
உதிராது தோல்விமுன் உரமாகு இப்பூமி
உனையென்றும் காக்கும் உறவு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply