வீதியெங்கிலும் தீமை சூழ்ந்தது.
வேதனைப் புதர் தான் வளர்ந்தது.
பேதமாயிரம் பூத்தெழுந்தது.
பிச்சல் பிடுங்கல்களே நிறைந்தது.
சோதனைகளும் சூழ்ந்துவந்தது.
சோறு தேடியே வாய்களோய்ந்தது.
நாதியற்றது நாடு; யாரிதை
நாறவைத்தது? நலிய விட்டது?
இந்து ஆழியின் சொத்து முத்தென,
எழிலியற்கையின் தாயகம் என,
எந்த இன்னலும் கண்டிடாமலே
இருந்து….நிம்மதி தந்த தீவென,
சுந்தரம் மிக நின்ற நம்மடி
சுதந்திரத்தின் பின் பெற்ற…’நோயிலே’
நொந்து ‘பேரினம்-சிறு இனம்’ என
நொடிந்து…இன்று இந் ‘நிலை’ அடைந்தது.
துன்பமே தொடர் கதைகளானது.
சொர்க்க மண்….பிச்சை கேட்டு ஏங்குது.
இன்பம் இங்கே வராதகன்றது.
இழ(ழி)வு மட்டுமே மிஞ்சுகின்றது.
“அன்னைமண்” என நின்ற சேய்களும்
அள்ளுப்பட்டூரை விட்டகலுது.
தொன்று செய் பழியா வதைக்குது?
‘துடைத்திடாவிடில்’…யாவர் வெல்வது?