மிகச்சிறிய வயதில் மிகப்பெரிதாய்த் தெரிந்தவீடு!
அதிகம் புரியாது
குழப்படி குறையாது
ஓடித் திரிகையில் உயர்ந்த படிகளொடும்
நீண்ட விறாந்தையொடும்
எட்டா ‘நிலை’யோடும்
கடக்கக் கடக்கக் கடந்துபோச்சு என்வீடு.
இருநூறடி வைத்துக்
களைத்தடைந்த என்தோட்டம்
இருபத்தைந் தடிவைக்க
என்னருகே வந்ததின்று.
இடைவெளி…மிகநீண்டு
மீண்டும்என் தாய்வீட்டின்
படலை திறந்தேன்
பிரமாணடப் படி,விறாந்தை
எட்டா வளை கூரை என்முன் சிறிதாச்சு.
அன்றைய என்அளவில்,
என்பார்வைச் சிறுபுலத்தில்,
பிரமிப்பாய் நிமிர்ந்த பெரும்வீடு…
இன்றெனது
வளர்ச்சியால்,
பார்வை விரிவால் குறுகிற்று.
தலைகுனிந்து கதவு
திறந்துள் நுழைகின்றேன்..
வீடுஅதே போலிருக்கு:
மனந்தானே மாறிற்று?
நாளையும் மறுநாளும் என்மனது விரிவுபெறும்.
நான்பார்க்கும் இப்பூமி
நாளையின்னும் நெருக்கமாகும்!