தேரடியில் தேடி எமைச் சீண்டுகிற காற்றும்
தீர்த்தம் தரும் கேணியதன் தேனமுத ஊற்றும்
கோபுரம் நிமிர்ந்துகலங் கரை யெனவே ஆளும்
கூட்டி வரும்…’திக்குத் தெரியாத வரை’
நாளும்
ஆறு நிலைப் பூசை மணி ஓசை வரவேற்கும்
அற்புதம் அடிக்கடி எம் கண்முன் அரங்கேறும்
ஊர் முழுதும் தூங்க நிழல் நல்கரசு ஆலும்
உற்ற துணை என்றபயம் நல்கும் ஒளி வேலும்!
வாச அகிற் தூப புகையும் அயலிற் பொங்க
வண்ண எழிற் தீபச் சுடர் வாசலில் துலங்க
பூசுகிற நீறு புனிதங்களையும் தூவ
பொட்டு எனும் சந்தனம் எண்ணத்தில் குளிர் பூச
நாத சுர கான மழை சூழும் அனல் ஓட்ட
நம்புபவர் நிம்மதிக்கு வேல் கருணை காட்ட
நாளும் வரம் ஊட்டும் மடி நல்லை நகர்க் கோவில்
ஞான வழி காட்டடுமதுவே நமக்குக் காவல்!