காலனைக் கண்டு நடுங்கிடும் -கதை
கவிஞன் எனக்கென்றும் இல்லையே-அவன்
ஓலம் இட்டோடித் தொலைந்திட -எந்தன்
ஊற்றுக் கவிதை உதவுமே -புது
வேல்களாய்ப் பாயும் வரிகள்முன்-எந்த
வில்லங்கம் துன்பந்தான் நிற்குமே?-உடல்
மாழும்… சிரஞ்சீவியாய் ‘அவை’-கூற்றும்
வணங்கும் படியாய் நிலைக்குமே!
எந்தன் கவிதை விதைகளோ-இந்த
எண்திக்கும் சென்று பரவிடும் -அங்கு
அந்தந்த மண்ணின் மணம் குணம்-பூண்டு
அற்புதம் கோடி புரிந்திடும்-அவை
மந்திரக் காய்கனி காய்த்திடும்-எங்கும்
வாழ்ந்திடும் மானுடர் மீட்சிக்காய்-பல
தந்திரம் சொல்லும்; வழிகாட்டும்-அவர்
தரித்திரம் போக்கி வலு ஊட்டும்!
காலனை வெல்லும் கவிதைகள்-அவை
காலத்தையும் வெல்லும் சிந்துகள்-புதுக்
கோலங்கள் போடும் ‘குமருகள்’-என்றும்
கொஞ்சி அணைக்கும் குழந்தைகள்-நட்புப்
பாலங்கள் போடும் உறவுகள்-துயர்
பற்றத்… தடுக்கும் திரவங்கள்-அவை
ஆலமும் ஆகும் உணருங்கள்-பல…
அமுதமாய் மாறும் அருந்துங்கள்!
தேடி வரத்தேவை இல்லைகாண்-அவை
தேடி உமைவந்து சேருமாம்-அன்பர்
நாடி அழைத்திடப் பொங்குமாம்-மேலும்
நன்மைகள் அள்ளி வழங்குமாம்-அவை
பாடிப்…பகிர்ந்து மகிழுவீர்-கையைப்
பற்றிப் பிடித்து நகருவீர்-வெற்றி
கூடித் தருமாம் தொடருவீர்-அதைக்
குடித்துண்டு நிம்மதி காணுவீர்!