மீளல்

அவனுடைய வீடு அதிர்ந்து நொருங்கிற்று.
அவனுடைய தோட்டப்
பயிர்கள் கருகிற்று.
அவன்வளர்த்த பசுக்கள் அனைத்தும் கலைந்துபோச்சு.
அவனினது நாய்க்குட்டி
வரும்போ திறந்துபோச்சு.
அவனினது சொத்துக்கள்
கேட்பதற்கு ஆட்களற்று
வெயிலில் மழையில்
வெடித்தே சிதைந்துபோச்சு.
இனியேலா தென்று இடம்பெயர்ந்த வேளையிலே..
எஞ்சியதை ஏற்றிய வாகனம்
கணைநெருப்பில்
பற்றிக் கருகிற்று.
கைப்பை சகிதம்தன்
குடும்பத்தைக் காத்துக்
கொண்டோடிப் போகையிலே
அவனின் மனைவி,
அழகுக் குஞ்சொன்று..வந்த
வெறிவேட்டுக் கிரையாக
வெறுந் தசையே துடித்திற்று.
நல்லடக்கம் செய்ய முடியா நரபலியால்
கனவு சுமந்த எதார்த்தம் சிதறிற்று.
அந்த நொடியின்பின்
அண்டம் பிளந்துவந்த
குண்டுச் சிதறல்களில் குருதிப்பூ கொட்டிற்று.
குடும்பமென்ன ஆனதென உணரும்முன்
அவன்நினைவும்
பிசகிற்று
இன்று பிணநிலையில் வெளிவந்தான்…
மீளக் குடியேற்றம்
அவனை அழைக்கிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply