எங்கள் குயில்கள் இனிமௌனம் பூண்டிடுமோ?
எங்கள் மயில்கள்
இனியாட மறந்திடுமோ?
ஆவேச மாக நிலமதிரப் பேசுகிற
வுhய்கள் முணுமுணுக்க மட்டும் பழகிடுமோ?
நேருக்குநேர் நோக்கும் நேத்திரம்
நிலம்நோக்கிப்
பார்த்தே அலைந்திடுமோ?
எமக்குப் பிடித்தமான
பாடல்கள் கேட்கச் செவிக்கு வரம்வருமோ?
முறுகி உயர்ந்து
முட்டி நிமிர்த்தியெழும்
கரங்கள் கும்பிட்டுக் கைகட்டி இறுகிடுமோ?
இரும்பாய் இருந்தகால்கள்
துரும்பாய்த் துவண்டிடுமோ?
முயன்று முயன்று முடியாது
இடைநடுவில்
முடிந்த பயணத்தில்…சேருமிடம் ஏதென்று
தெரியாத அவலத்தின் தீ
எம்மை விரட்டிடுமோ?
எங்களது சந்தைகளில் இறைந்துளதெம்
விருப்பங்கள்…
பேரங்கள் பேசுதற்கோ
பெறுமதிக்கு விற்பதற்கோ
தரகர்க்கு ஏற்ப தரகுசெய்து மீட்பதற்கோ
யாருமற்று
வருவோர் போவோர்தம் விலைக்கேற்ப
கொள்வனவு செய்யும் கொடுமைகள் நீண்டிடுமோ?
எதிர்பார்ப்பு விருட்சக் கிளைகள்
தொடர்ந்தொவொன்றாய்
முறிபட்டு விருட்சம் மொட்டை அடிபட்டுக்
கிடக்கிறது
வேர்கிண்ட வருவோர்கள் வெல்வாரோ?
எத்தனை வருடமாய்
இருந்தஎம் வியாதிக்கு
பரிகாரம் பார்த்து, மருந்தும் பலனற்று
அறுவைச் சிகிச்சையாலும் ஆகாது
அறுத்தகாயம்
மாறாது நோவும் மறையாது
இன்றைக்கோ
அன்றிருந்த நோய்முற்றி
அல்லலுறும் நம்வாழ்வில்
நோயை மறைத்துவிட்டு
நோய்க்கு மருந்திடாது
நோயென்று ஏதுமில்லை என்று
சொல்கின்ற
வைத்தியர்கள் மூலம் எம் உயிர்கள் பிழைத்திடுமோ?
எங்கள் குயில்கள் இனிமௌனம் பூண்டிடுமோ?
ஏங்கள் மயில்கள்
இனியாட மறந்திடுமோ?