துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல்
அயலோடு கட்டி
அப்படியே பேர்ட்டுவிட
கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில்
செய்வ தறியாமல்
திகைத்துக் கிடக்கின்றேன்.
தினமும், தினந்தோறும்
சிறிதும் பெரிதுமாகப்
பிணைக்குதெனை இடரின் கயிறுகள்
மென்னேலும்.
இறுக்குகிற கட்டுக்கள்
இன்னும் உடல்நசிக்க
அறுக்க முடியாமல் உயிரும் அழுகிறதே!
நசியும் வலியில்
நரம்பு தகர்கிறதே!
நசியும் உயிர்பற்றி எவர்க்கும் கவலையில்லை.
‘நசிந்தாற்தான் என்ன’
யார்க்கும் இரக்கமில்லை.
நசிக்கும் துயரக் கயிற்று வலைசிக்கி
வெளியே வரஏதும்
வழியுந் தெரியாது,
கனவுகளில் ஏதும் கைகூடும்
எனமட்டும்
நினைத்துக் கிடக்கின்றேன்.
நினைத்தென்னை காப்பாற்ற
எவனும் வருவானா
இயலாமற் கேட்கின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply