என்னதான் தேசம் என்னதான் நீதி
என்ன ஊர் போகிற போக்கு?
எங்குபோய்ச் சேரும் எங்களின் வாழ்வு?
இல்லை நாளை பற்றி நோக்கு.
புன்னகை சாகும் போலிகள் சூழும்
பொய்களைக் காத்திடும் ‘வாக்கு’.
போய் விழ வேணும் புதுவழி காண
போர்க்கவியால் நிதம் தாக்கு!
விரலுக்கு ஏற்ற வீக்கமாய்ச் செல்வம்
வில்லங்கம் அற்று நாம் வாழ்ந்தும்,
விளைவை அறுத்தும், பெருமையாய்ப் போற்றும்
விழுமியம் கலைகளில் ஆழ்ந்தும்,
வரமாய் இயற்கைச் சுவாத்தியத் தோடு
வளர்ந்தது எம் சொந்த மாண்பும்.
வகுத்ததார் பேதம்? விளைத்ததார் சேதம்?
மரிக்குது…கண்ணியம் தாழ்ந்தும்.
அறிவால் உயர்ந்தோம் அழகால் உயர்ந்தோம்
அகத்தால் உயர்ந்தோமா? இல்லை.
அருளால் உயர்ந்தோம் அயல் முன் உயர்ந்தோம்
‘அணைத்து’ உயர்ந்ததும் இல்லை.
நெறி சொலும் நூல்கள் நியாய மதங்கள்
நீதி சம மாக்க வில்லை.
நிலமை இவ்வாறே தொடர்ந்திடில் நாளை
நிம்மதி தீர்க்குமா தொல்லை?