எந்த வகைக்கோழி இட்டு
அடைகாத்து
வந்து பொரிக்குமுன்னர்
வீணாய் உடைந்த ‘முட்டை-
மஞ்சட் கரு’ வானில்
மினுங்கிடுது சூரியனாய்?
எது அந்தக் கோழி?
இயற்கையா அக்கோழி?
அது இட்ட ஒரேமுட்டை உடைய
சூரிய ‘மஞ்சள்
கரு’ இருக்கிறது இன்றும்!
இரா மறைத்து ஒளித்தாலும்
தெரியுது பகலிலென்றும்!
இதன்முட்டை அடைகாத்துப்
பொரித்திருந்தால் எப்படித்தான் போயிருக்கும்
பிரபஞ்சம்?
“இன்னும் பலநூறு சூரியன்கள் இருக்கிறதாம்”
என்றால்…அதே கோழி
இட்டமுட்டை எல்லாமும்
பொரிக்காமல் உடைந்தனவோ?
பொரிக்கக் கூடாதென்றோர்
கரம் அவற்றை உடைத்ததோ?
அக்கரம் கடவுளதோ?
விரிகின்ற கற்பனைக்கு
விலங்கிடத்தான் முடிகிறதோ?