வாசலில் நின்று வறுமை துணிந்து
வரவேற்பு பாடுது இன்று.
வரும்படி கெட்டு கடன் உடன் பட்டு
வாழ்வு தேய்ந்திழியுது சென்று.
காசில்லை என்று கஜானா வரண்டு
காலியாய் ஆனதால் மன்று
காயுது பசியில்…விலைகள் உயர்ந்து
கடிக்குது புலன்களைத் தின்று.
விளைச்சலும் இல்லை ‘இறக்கலும்’ இல்லை
விதைப்பதும் இல்லை இந்நாளில்
விபரமும் இல்லை விளக்கமும் இல்லை
வெற்றிடம் வளருது தோளில்
அழுகையும் நோயும் அடிக்கடி சாவும்
அயலில் மலிந்திடும் போதில்
அழிபசி தீர்க்க உறவொடு நட்பும்
அருகினில் இல்லையே ஊரில்.
மாற்றங்கள் நேரும் மறுபடி யாவும்
வழமைபோல் வருமெனக் காத்து
வாழ்வையும் ஓட்ட வழிதெரி யாது
வதங்குது ‘சராசரி’ வேர்த்து
ஏற்றம் வளர்ச்சி இங்கெழ வாய்ப்பே
இல்லா யதார்த்தத்தைப் பார்த்து
இருப்பதா இல்லை இறப்பதா என்று
எழும் தினம் குழப்பமும் பூத்து.
வசதிகள் உள்ளோர் வறுமை வலைக்குள்
மாட்டாது வெளிதேசம் போக,
வரலாற்றில் அன்று சமாளித்த பேரும்
வழுக்கி விழுந்து எழா தேங்க,
பசி வரப் பத்தும் பறந்திட, வாழ்வு
‘பலன்’…பிழை வழிகளில் தேட,
பலிகளும் நேர, பகுத்தாய்ந்து மீள
பழி துடைப்பார் இல்லை சூழ!
இப்படி இன்னும் எத்தனை நாட்கள்
எமை ‘ஒறுத்தே’ உயிர் காப்போம்?
எம் உடல் ஆற்றல் எம் உள ஓர்மம்
இற்றோம்…எழுந்துமா ஆர்ப்போம்?
எப்படி வாழ்ந்தோம் இப்படி ஆச்சே
எப்படி? ஏன்? எவர் கேட்டோம்?
எதார்த்தத்தை ஏற்கோம் அதிசயம் இன்னும்
எழும் என்றுமா நம்புகின்றோம்?
எங்களின் காலில் அன்று நின்றோமே
இன்று அவ் வழி வகை தேடி
எம் தரி சுகளை மாற்றி வயல்கள்
எழுச்சிகொள வழி நாடி
இங்கூர்த் தொழில் வகை தூண்டி ஸ்திரம் பலம்
இம்மண்ணிலே வரக் கூடி
இடாம்பீகம் ஆடம் பரம் விட்டெம் வாழ்வை
இனி அடைவோம் பிழை சாடி!