நிம்மதி வரச் சம்மதி உனை
நீண்ட நாட்களாய்த் தேடினேன்.
நேரிலே உனைக் காணவே நிதம்
நெஞ்சினால் வரம் கேட்கிறேன்.
சம்மதித்து நீ வந்ததில்லை…ஏன்
தான் என அறியாதுளேன்.
தள்ளி விட்டதேன் என்னை? யாரினைச்
சார்கிறாய் தெரியாதுளேன்.
கூடி இலட்சமாய்ச் செல்வம் வந்தது
கொற்றம் கொடி குடை வாய்த்தது.
கோடி சுற்றமும் நட்பும் தொண்டரும்
குவிய தேஜசும் தோன்றுது.
தேடி வந்தன பட்டம் பதவிகள்
சேர்ந்திடா…நிம்மதியது
தீயை மூட்டுது; வாழ்வின் அர்த்தமும்
தீய்ந்து அற்பமென்றாகுது.
“என்னதான் இருந்தாலும் நெஞ்சிலே
இல்லை நிம்மதி என்றிடில்
ஏதுமே சுவறா துடல் தனில்
ஏக்கம் மிஞ்சும் உயிரினில்”
என்பதை அறிந்தின்று நேர்கிறேன்…
எப்படி நிம்மதியினை
என்னுள் கொண்டர எவ் வழி வகை
எங்கு உண்டு? யான் தேடுவேன்