தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும்
தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும்
வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும்
வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும்
நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய்.
நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய்.
நாதியற்றவர்க்கு நின்று நன்மை செய்யப் பார்க்கிறாய்.
நாளை தீயர் ஓட…மண்ணின் நாயகனாய் மாறுவாய்!
நன்மை செய்ய எண்ணுவோர்க்கு நாளும் சூழும் வேதனை
நற்பெயர்க்குத் தோன்றுமே களங்கம் நீளும் சோதனை
அன்பு வைக்கும் அண்ணல் கட்கு ஆரும் செய்திடார் துணை
அறவழிக்கே நிற்பவர்க்கு வைத்திடார் பிறர் ‘பிணை’
நன்றி கெட்டு வாழ்பவர்கள் நாளும் செய்வர் சாதனை
நஞ்சுவைக்க அஞ்சிடாதோர் சொல்கிறார்கள் போதனை
அன்று தொட்டு இன்றும் இந்த நிலைமை…தீரலை வினை.
அஞ்சிடாது செல்லுன் பாதை; யார் தடுப்ப துந்தனை!