கோடை

நெருப்பள்ளிக் கொட்டுது நெடும்பகல்.
தீப்பிடித்து
எரிகிறது திசைகள்.
‘எரிபற்று நிலை’ கடந்து
பொசுங்கிய காற்று
பொடியாய்ப் புழுதியாய்
அசைவற் றடங்கிற்று.
அனற்பிளம்பாய் நிலம்மாறி
கால்வைக்க முடியாது கடுப்பேற்ற,
பெருவெக்கை
மேலை வறுக்க,
வியர்வை நசநசக்க,
உடலும் மூளையும் உயிரதுவும்
சூடேறிக்
கிடக்கிறது கொதித்து.
மரங்களும் கிளைகளும்
புழுக்கம் தணிக்காது
இலையுதிர்த்துப் பொருமிடுது.
அழகற்றுப் போச்சு அயற்பசுமை;
நீர்ப்பிடிப்பு
இலாது எல்லாமும் காய்ந்து
வரண்டெரிய
தகிக்கிறது பளிங்கு வெயில்.
அதன் தகிப்புத் தணல் விழுந்து
புகைகிறது வாடிப் பொசுங்கிய
புற்தரைகள்.
தாகம் எடுக்கிறது
தலையிருந்து கால்வரைக்கும்.
நாவால் வியர்வைவிடும் நாய்களும்
என்செய்து
ஏதுசெய்வ தென்று அறியாது
நீர்நிலைகள்
தேடி அலைய,
“திகைக்கும் பறவைகளும்
காலடிக்குள் இடறும் பூச்சி புழு எறும்பும்
எங்கே ஒதுங்கின இந்தத் தகிப்புக்குள்”
என்று நாம் தேட
எங்கோ பதுங்கின…ஆம்
சூரியன் அருகில் தொட்டுச்சம்
கொடுப்பதற்கு
வாறதிந்தக் காலம்…
வரட்சியும் கொதிப்பும்
மேனி கறுக்கக் கருக்கும்
வெயிலும் நிலச்
சூடும் பகலைச்
சுடு தாச்சியில் வறுக்கும்
காலம்;
இக் கோடையிலே
கருகிப் பொசுங்கியெங்கோ
சாம்பலான காற்று…
சாம்பலில் இருந்தெழும்பும்
பீனிக்ஸாய் மீண்டும்
பிறந்து வந்து அனல்
ஓட்டிக் கலைக்காட்டி….
நாமும் உயிர் பிறவும்
கூட்டமாயே கருவாடாய் மாறுவது
தான் நடக்கும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.