கேள்விச் செவிடன்

எங்கள்மேல் காற்று எரிதணலை வீசிடுதே!
எங்கள்மேல் மாரி
அமிலமழை கொட்டிடுதே!
எங்கள்மேல் வெய்யில் எரிதாராய்ச் சுட்டிடுதே!
எங்கள்மேல் அலைகள்
கழிவைத் தெளித்திடுதே!
எங்கள்மேல் பூக்கள் இரத்தம் சொரிகிறதே!
எங்களது பாடல் ஒப்பாரி ஆகிடுதே!
ஏன்தான் இவ்வாறு
இழவு தொடர்கிறது?
ஏனோ இப்படியாய் இழப்புகள் உலுப்பிடுது?
ஏனோ எமதிருப்பில் இடிகள் விழுகிறது?
ஏனேனோ எங்களையே விதியும் தகர்க்கிறது?
யாரிட்ட சாபம்?
எவரின் சபிப்புக்கள்?
யார்முன்பு செய்த பழிபாவத்தின் தொடர்ச்சி?
ஏனோ எமதிருப்பில்
இடிகள் விழுகிறது?
வேரும் படிப்படியாய்க்
கருகிப் புகைந்திடையில்
பூவின் பழத்தின்
பொருளென்ன ஆவதின்று?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply