எனக்கானது எது

எனக்கான எதனை நானும் படைத்துவிட்டேன்?
எனது வாழ்வு
என்விருப்பம் போன்றதில்லை.
எனது இறந்தகாலம் என்ஆசை போலில்லை.
எனது நிகழ்காலம்
என்பேச்சைக் கேட்குதில்லை.
எனது எதிர்காலம் எப்படியோ?
புரியவில்லை.
எனக்கான எதுவும்
எனைக்கேட்காது தம்பாட்டில்
எனையியக்கப் பம்பரமாய் என்பாடு சுழல்கிறது.
எனக்கான வாழ்வை,
எனக்கான துணையை,
எனக்கான சொத்தை,
எனக்கான செல்லத்தை,
நனவினிலே தேட நடப்பதெல்லாம் கனவாச்சு.
எனது பிறப்பே
என்விருப்பைக் கேட்காமல்
தனதுபாட் டினிலே நடந்தென்னைத்
தரையில்விட
நினைவு எனைச்சுட்டு நீறாய்ப் பொசுக்கிடுது.
எனக்கான எதனை நானும் படைத்துவிட்டேன்?
எனக்கான எதுவும்
எனைக்கேளாது என்விருப்பை
கணக்கில் எடாது
கணமும் நிகழ்கையிலே…
எனையியக்கி
எனக்கு ஏதோ அருள்கின்ற
அனைவரையும் வேண்டி
எனைநானும் கேட்கின்றேன்…
எனக்கான ‘அத்தனையும்’
எப்போநான் படைத்திடுவேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply