கவிதைக்கடல் கலத்தல்

எங்கே கவிதையெனக் கேட்போர்க்குக் காட்டுகிறேன்.
இங்கே கவிதையென
எவரெவரோ கூவுகிறார்.
கடலாம் கவிதையிலே…
அவரவர்கள் கண்டவையோ
கடல்முழுதை அல்ல
அலையைக், கடல்நுரையை,
அலையில் மிதந்துவந்த
அற்பமான பாசிகளை,
ஆம் கரையிற் சேர்ந்த
ஐந்தாறு சிப்பிகளை,
நீண்டு கிடக்கும் நெடுங்கரையில் ஓர்துண்டை,
உயிர்ததம்பித் துடிக்கின்ற
ஓரிரண்டு மீன்வகையை,
உயரப் பறந்து அலைக்கு
உறவான கொக்குகளை,
கண்டுவிட்டு…
தாங்கள் கடலின் பெருவடிவைக்
கண்டோம் எனஅளந்தார்!
கடலுக் கிலக்கணமே
என்னென் றறியார்
அதன்கரையில் நீந்தஒட்டும்
மண்ணைக் கரத்துள் வழித்து எடுத்து…இதோ
எங்கள் கவிதைப்
படைப்பென் றிறுமார்ந்தார்!
எங்கும் விரிந்து எண்திசையையும் அளந்து
எங்கும் வியாபகித்த
இராட்சத சமுத்திரமே
கவிதையெனத் தெளிந்து:
கண்டோர் தாம்பிடித்ததுவே
கவிதையென வாதாடும் கருத்தைக் கணக்கெடாது:
இதுகவிதை எனநிறுத்து
விமர்சிக்க நினையாது,
பிரமாண்டக் கவிதைமுன்
பிரமித்துக் கிடக்கின்றேன்.
இரசித்துஎடை போடஎன்னால்
ஏலாதிதை ஏற்றேன்.
இங்கே கவிதையென எவரெவரோ கூவுகிறார்!
இங்கே கவிதையென எதையெதையோ
தாம்கண்ட
சங்கினையோ பாசியையோ
தலைதூக்கி ஆடுகிறார்.
எங்கும் விரிந்து எண்திசையையும் அளந்து
எங்கும் வியாபகித்து
விலைபேச முடியாத
கவிதையெனும் சாகரத்தில்
கலக்கநான் நீந்துகிறேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply