காலனை வென்றவன் யாரெனக் கேட்டிடில்…
“கவிஞனே” என்றிடும் ஊரு.
கற்பனைக்குள் பல அற்புதம், அதிசயம்
காட்டிடும் அவன் திறம் பாரு.
சீலமும் ஞானமும் செம்மையும் கொண்டவன்
சிந்தையில் ஊறிடும் ஊற்று…
தீமை அநீதி அதர்மம் பொய் ஆகிய
தீக்களை நூர்த்திடும் கூற்று!
காலத்தைச் சொற்களால் கோலமாய்ப் போடுவான்
காலாவதி யாகிடாது,
கல்வெட்டு என்றுநம் வருகிற சந்ததி
காண உதவிடும் பாரு.
தோலோ டெலும்புக்கிப் போனாலும்
தோற்காது
தொடரும் அவன் உயிர்ப் பாவு.
சொல்லும் நிஜம் அவன் சொல்; என்றும் வரலாற்றைச்
சொல்லும் அவன் வரி…கேளு!
சாமானியர்கள் தாம் நூற்றுக்குத் தொண்ணூறு
சதவீதம் என்கின்ற மண்ணில்;
சாத்தியம் ஆனதைச் செய்வோர் பலர்…அ-
சாத்தியம் செய்வோரே விண்ணில்…
பேரோடு வாழுவார்; செயற்கரிய செய்வோரின்
பெருமையை ஒற்றும் ஊர் கண்ணில்!
பெரியவர் உய்தவர் இவரென்று போற்றுமாம்
பீடு வரலாறு…பண்ணில்!
பாவில் செயற்கரிய செய்துமே வையத்தைப்
பாலிக்கும் கவிஞரைப் போற்றி,
பயணிக்கும்…இருக்கிற பாதையில் மானுடப்
பார்வைக்கு ஒளிக்கவி ஊட்டி,
காலத்தின் தூதினைக் கவின்மொழிக்குள் சொல்லும்
கவிஞரே புவியில் முன்னோடி.
காணலாம் உலகெங்கும்…கவிஞர்தான் உணர்ச்சிக்குக்
கடிவாளம் இடுவராம்…தேடி!