கற்பனைச் சுகம்

‘திருநீல கண்டமாய்’ வானம் நிறத்திருக்கு!
வானம் சிவனினது கண்டமெனின்
உடல்…நிலமா?
சிவனினது சென்னி தேவலோகம் எனலாமா?
எங்கிருந்து தோன்றிற்று இந்நஞ்சு?
வானமெங்கும்
இந்த வாறாக இறைந்து பரவிடுதே…
எங்கிருந்து ஊறிடுது இந்நஞ்சு?
பாற்கடலால்
வந்ததெனின்..பாற்கடலும் எங்கே படர்ந்துளது?
வானோடு தங்கிவிட்ட மாயநஞ்சாய்…
தலை, உடற்கு
ஏதுமே ஆகாமல்…’இயற்கை’ உயிர்ப்போடே
வாழ்ந்து செழிக்கிறது!
வானிருந்து துளித்துளியாய்…
நாளும் வடிந்தநஞ்சோ கடலென்னும்… கற்பனையில்,
கழுத்திலொரு மச்சமாக நிலவு
தெரிகிறதோ
என்ற ஒரு கேள்விதனில்,
வேலைவெட்டி இல்லாமல்
வெளிர்நீல வானை வெறித்து
அமர்ந்திருந்த
கணங்களுக்கும் அர்த்தம் இருத்தல் புரிகிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply