கோடி கோடி கனாக்கள் எழும் விழும்.
கோடியில் சில தானே பலித்திடும்.
கோடி கோடி கனாவில்…அனேகமாய்
குலைந்து கலைந்து பலதும் மறைந்திடும்.
ஆழ்ந்த துயிலில் அலைக்கும் கனாக்களில்
அனேகம்…அர்த்தங்கள் அற்றே சிதறிடும்.
ஆம்…’விழிப்பில் கலைந்திடக் கூடாத’
அகக் கனவுகள். என்றும் தொடரணும்!
“எவை கலைந்திடக் கூடாது” என்று நாம்
எண்ணுவோமோ…அவற்றைக் கலைத்திட
எவை எவை வழி உண்டோ, கவனத்தை
எப்படித் திசை மாற்றலாம் என்றோ…பார்
எவர் எவர்களோ வந்து சதிசெய்வார்.
இடர் தடை பல தந்தும் முயலுவார்.
அவலம் சூழ்ந்திட வைப்போர்…அவர்பற்றி
அலட்டிடா தெம் கனாக்களைக் காணுவம்!