மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ
நிம்மதி… மனம் கேட்டதே!
நீசமே தரும் வெவ்விதி…எனை
நித்தம் சிப்பிலி ஆட்டுதே!
அஞ்சல் என்றெனை ஆதரித் திட
ஆருமில்லை அயலிலே!
ஐயன் நீயும் அணைத்திடா விடில்
அர்த்தமென்ன என் வாழ்விலே?

உன்னை மட்டுமே நம்பும் அற்பன்; உன்
உற்ற தாழ் சரண் என்பவன்;
ஊரில் யாரிலும் தங்கி வாழ்ந்திடான்;
ஊழலின் பின் செல்லாதவன்;
மின்னும் பொன் பொருள், மேன்மைக் கல்விகள்,
மேதமை இல்லாதவன்;
மீறிடேன் உந்தன் சொல்லை…உன்னை
மிஞ்சி ஏதும் செய்யாதவன்!

எந்த நேரமும் வந்தருள் கொடு
என்னுள் மும்மலம் கொன்றிடு.
இன்பம் தேடி அலையும் நெஞ்சினுக்கு
ஏது செய்தும் பதில் கொடு.
பந்த பாசத்தின் போதை போக்கிடு.
பாவம் செய்யத் தடுத்திடு.
பாதை காட்டு. பயணத் துணை எனப்
பைய என்னைத் தொடர்ந்திடு.

அன்று சூரர்கள் மூவர்; இன்று காண்
ஆயிரம் வகைச் சூரர்கள்.
ஆட்டுவித்தவர் ஆட நிம்மதி
அற்று வாடுவோம் தேவர்கள்!
அன்று சங்கரித் திட்டதாய் இன்றும்
ஆடு வேலவா வேட்டைகள்.
ஆணவம், கன்மம், மாயை சாய்த்து
அடக்கு அன்னவர் சேட்டைகள்.

மந்திரங்களும் தந்திரங்களும்
மன்னனுன்னை அறியுமோ?
மாயமும் பொய்மை ஜாலமும் பணம்
வாய்ப்பும் உன்னை மயக்குமோ?
சிந்தையால் பிழை செய்திடா துனைத்
தேடுவோர் அன்பு பொய்க்குமோ?
‘செந்தீ நல்லை வேல்’ அன்பர் யாரென
தேர்ந்திடும்; மறக்குமோ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.