சொந்தம் யாவுமே வந்த போதிலும்
துன்பம் நூறும் தொலையுமோ?
சூழும் தீயிடர்… சொல்லும் வார்த்தையில்
சோர்ந்து சாய்ந்து கருகுமோ?
நொந்த மேனி, மனத்தின் காயம், நோய்,
நூல்கள் கட்ட மறையுமோ?
நோன்பு நோற்றிடு; தெய்வத்தின் விழி
நோக்கின் தீமைகள் நீளுமோ?
நம்பு ஓர் பொருள் நாலு திக்கை
நடத்தும் ஓர் சக்தி உள்ளது.
நியாயம் நீதி அறத்தின் மெய்வழி
நாடு…உனைக் கைவிடாதது
தெம்பு உள்ள இளமை…”செய்வம் யாம்
செய்வம்” என்று தான் தோற்றது.
தேயும் அந்திம காலம் தெய்வமே
தீர்வுகள் தரும் நம்பிடு!
“எங்கு காட்டு இறை ? அச் ‘செல் வழி’
ஈஃது மூடரின் நம்பிக்கை”
என்று நாத்திகம் பேசியோர் சிலர்
இயலுமை கெட…அஞ்சிக்கை
எங்கும் நீட்டி “எதுவுமே துணை
இல்லை” என்கையில் கெஞ்சி …மெய்
ஏற்று…நிம்மதி கண்டனர்…மனம்
எண்ணு ஆன்மிகம் சொன்னவை!