உண்மைகளை எல்லோரும் உணர்வார்…சாகா
உண்மைகளை யாவரும்தான் மதித்து நிற்பார்.
உண்மைகளை எவரும் மறு தலிக்கார்…என்றும்
உண்மைகள்தாம் வெல்லும் என்றுரைப்பார். ஏற்பார்.
உண்மையதன் பெருமையை எல்லோரும் காண்பார்.
உண்மைகளின் கசப்பினையும் ஊரார் தேர்வார்.
“உண்மைகட்கு உரிய இடம் கொடுக்கும் காலம்
உறுதியாக” என மேலோர் நம்பி வெல்வார்.
உண்மைகள் உயிர்காக்கும். உதவி செய்யும்.
உண்மைதான் அறவழியில் நடத்திச் செல்லும்.
உண்மைகள் ஒளியூட்டும். இருளை ஓட்டும்.
உண்மைகள் உள் அழுக்கைக் கழுவி வீழ்த்தும்.
உண்மைகள் அசரீரி யாகி நல்ல
உளத்தில் அகப்புறச் செவியில் ஞானம் சொல்லும்.
உண்மைதான் பொய் பிழையை ஒழிக்கும். பூமி
உண்மையொன்று இருப்பதாற்தான்
உயிர்ப்பாய்ச் சுற்றும்.
ஒருநூறு துயரங்கள் தொடர்ந்த போதும்
உண்மையின் பின் நின்று அவை தாண்டி வந்தோன்,
ஒரு கோடி நெருக்கடிகள் சவால்கள் சூழ்ந்து
ஒழிக்க நிற்க…உண்மை மட்டும் பேசி வென்றோன்,
திறமை பலம் தந்திரங்கள் இருந்தும் உண்மை
சேராது சாதனைகள் கலையப் பார்த்தோன்,
“உறுதி உண்மை நேர்மை காக்கும்;
பிழையும் பொய்யும்
ஒருநாளும் நிலைக்காது” கண்டு கொண்டேன்!