கடந்து போன காலம்

இரண்டு கரங்களையும் பொத்திப் பிடித்தபடி
பிறந்தனதான் முன்பு பிள்ளைகள்
பிறகொருகால்
பொத்திய பிஞ்சுக் கரமொன்றில் தோட்டாவும்
மற்றையதில் துப்பாக்கிக் குறியோடும்
தான்… சேய்கள்
மண்ணில் குதித்து
மளமளென் றெழுந்தார்கள்!
உண்மை அவர்களின்முன் உருமாறிப் போயிற்று.
அவர்களின் ஞாபக ஆழங்கள் எங்கும்
பழிவாங்கும் எண்ணமெனும் கஞ்சா…பயிராச்சு!
‘அந்தக் கொலையியல்பைக்
காவும் நிறமூர்த்தம்
என்றும் விகாரமுற்று மாறல் விளைந்து வந்து
பாசம் அன்பின் பக்கம்
போய்விடவே கூடாது’
என்ற அவதானம் அருந்தது எல்லோரிடமும்.
ஆதலால் கொலையே தொழிலாச்சு அட்டதிக்கும்!
தம்கொலையைத் தர்க்க நியாயங்கள் மூலம்
எண்பிக்க வல்ல மூளையும்,
ஈவிரக்கம்
இழகுகிற தன்மைகாட்டா இதயமும்,
கர்ணனின்
கவச குண்டலம்போல உயிர்காக்க உதவிற்று.
இவர்களில்லை..அவர்களில்லை…
எவரென்று அறியாரும்
இந்தத் தொழில்புரியும் ஒரேஜாதி ஆனதனால்
பிரசவ விடுதிகளை விடவும்
பிணக்கிடங்கில்
பிழைப்புப் பெருகிற்று…
நம் ஊர்கள் பிரேதமாச்சு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply